செய்திகள்
காய்கறிகள்

மிக குறைந்த விலைக்கு காய்கறிகள் கொள்முதல்- விவசாயிகள் பாதிப்பு

Published On 2020-06-27 21:17 IST   |   Update On 2020-06-27 21:17:00 IST
கீரமங்கலம் பகுதியில் மிக குறைந்த விலைக்கு காய்கறிகள் கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கீரமங்கலம்:

கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல், குளமங்கலம், பனங்குளம், நெய்வத்தளி, மேற்பனைக்காடு, செரியலூர் உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களில் காய், கனி, கிழங்கு, மலர்கள் என அனைத்து விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கத்தரிக்காய், வெண்டைக்காய், பைத்தங்காய், புடலை உள்ளிட்ட காய்கறிகள் உற்பத்தி அதிகமாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகள் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி போன்ற பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக மதியம் 2 மணியுடன் அனைத்து கடைகளும் மூடப்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு வாகனங்கள் செல்வதும் தடுக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ காய்கறிகளை ரூ.15 முதல் ரூ.20 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்த வியாபாரிகள் தற்போது ரூ.5-க்கு கொள்முதல் செய்கின்றனர். பல கமிஷன் கடைகளில் காய்கறிகள் வேண்டாம் என்று திருப்பி அனுப்பும் நிலையும் உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Similar News