செய்திகள்
ஊட்டியில் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தியதை படத்தில் காணலாம்.

ஊட்டியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம்

Published On 2020-06-22 09:01 GMT   |   Update On 2020-06-22 09:01 GMT
ஊட்டியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி:

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஒட்டி உள்ள நீலகிரி மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் இல்லாதவர்களின் வாகனங்களும் சோதனைச்சாவடிகள் வழியாக அனுமதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் ஊட்டி நகராட்சி பகுதியில் வெளிமாநில வாகனங்கள் அதிகளவு செல்வதை காண முடிகிறது. இதையடுத்து அனைத்து அதிகாரிகளும் ஊட்டி நகராட்சி பகுதியில் இயக்கப்படும் வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி ஊட்டியில் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி தலைமையில் சுகாதார அதிகாரி (பொறுப்பு) பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஊட்டி-குன்னூர் சாலை லவ்டேல் சந்திப்பு, ஊட்டி-கூடலூர் சாலை எச்.பி.எப். இந்து நகர் பகுதி, ஊட்டி-கோத்தகிரி சாலை கோடப்பமந்து ஆகிய 3 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களில் வருபவர்கள் உள்ளூர் முகவரியில் வசித்து வருகிறார்களா? என்பதை உறுதி செய்ய ஆதார் அடையாள அட்டையை வாங்கி சரிபார்த்தனர். இருசக்கர, நான்கு சக்கர மற்றும் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.

வாகனங்களில் பலர் முகக்கவசம் வைத்திருந்தும், ஆனால் அணியாமல் வந்ததும் சோதனையில் தெரியவந்தது. கடந்த 2 நாட்களில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Tags:    

Similar News