செய்திகள்
வெலிங்டன் முகாமில் ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்த காட்சி.

வெலிங்டனில் ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி

Published On 2020-06-22 14:27 IST   |   Update On 2020-06-22 14:27:00 IST
சர்வதேச யோகா தினத்தையொட்டி வெலிங்டனில் ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
ஊட்டி:

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. இதில் 850 ராணுவ வீரர்கள் கலந்துகொண்டு பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர். அனைவரும் சமூக இடைவெளி விட்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் நீலகிரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தபடியே யோகா பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையொட்டி ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் தங்களது வீடுகளில் யோகா பயிற்சி செய்தனர்.

தரையில் போர்வை விரித்து அதன் மீது அமர்ந்து மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம், தனுராசனம் வஜ்ராசனம், ஹாலாசனம் போன்ற யோகாசனங்களை மேற்கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் போட்டிக்காக உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதேபோன்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆன்லைன் மூலம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். விலங்கியல் துறைத்தலைவர் எபனேசர் வரவேற்றார். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தபடியே பல்வேறு யோகா பயிற்சிகளை செய்தனர். ஆன்லைனில் ஒருவர் யோகாபயிற்சி கொடுக்க அதை பின்பற்றி மாணவ-மாணவிகள் செய்தார்கள்.மேலும் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் உள்பட பலரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டு யோகாபயிற்சி செய்தனர்.

Similar News