செய்திகள்
கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன்

போலி இ-பாசுடன் கடலூருக்கு வந்தால் நடவடிக்கை- கலெக்டர் அன்புசெல்வன் எச்சரிக்கை

Published On 2020-06-20 14:55 GMT   |   Update On 2020-06-20 14:55 GMT
போலி இ-பாஸ் பெற்று கடலூருக்குள் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அன்புசெல்வன் எச்சரித்துள்ளார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர் மாவட்டத்திற்குள் நுழைபவர்களை பரிசோதனை செய்யும் வகையில் சின்ன கங்கணாங்குப்பம், கண்டரக்கோட்டை உள்பட 5 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் மற்றும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த சோதனை சாவடிகள் வழியாக வந்த 2,543 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளது. அதில், 822 வாகனங்கள் மட்டுமே இ-பாஸ் பெற்று வந்துள்ளன.

எனவே போலியான இ-பாசுடன் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, மும்பை, குஜராத் ஆகிய பகுதிகளிலிருந்து இ-பாஸ் பெற்று வருபவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு முகாம்களில் தங்க விருப்பம் இல்லாதவர்கள் தனியார் ஓட்டல், தங்கும் விடுதிகளில் கட்டணத்துடன் தங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எல்லைகளில் பரிசோதனையை தீவிரப்படுத்தியிருப்பதால் சென்னையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும்.

வணிகர்கள் தங்களது விற்பனை நேரத்தை குறைத்துக் கொள்வதாக தெரிவித்திருப்பதால் ஒரே நேரத்தில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் ஆகியவற்றை பொதுமக்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த அரசுக்கும் தனிமனிதர் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருவதை பொதுமக்கள் உணர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
Tags:    

Similar News