செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

நீலகிரி மாவட்டத்தில் பெண் குழந்தை உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-20 17:25 IST   |   Update On 2020-06-20 17:25:00 IST
நீலகிரி மாவட்டத்தில் பெண் குழந்தை உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிப்பு 30 ஆக உயர்ந்து இருக்கிறது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டு, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்பிறகு பெங்களூருவுக்கு சென்று திரும்பிய ஊட்டியை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் 4 பேர், கோவை மாவட்டத்துக்கு சென்று திரும்பிய 2 பேர், கரூர் மாவட்டத்துக்கு சென்று திரும்பிய ஆசிரியை என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து நேற்று முன்தினம் சென்னையில் இருந்து குன்னூருக்கு வந்த 2 பேர் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி நீலகிரியில் இருந்து அனுப்பப்பட்ட மொத்தம் 12 பேர், கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே குன்னூருக்கு வந்த 2 பேர், சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், அந்த மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதன்படி நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 வயது பெண் குழந்தை உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட குளிச்சோலை பகுதியை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, 16 வயது சிறுமி என 2 பேருக்கு தொற்று உறுதியானது.

மேலும் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து ஊட்டி அருகே உள்ள காந்தல் கீழ் போகி தெருவுக்கு வந்த 22 வயது இளம்பெண்ணுக்கு தொற்று உறுதியானது. அவருடன் தொடர்பில் இருந்த 20 வயது இளம்பெண், 47 வயது பெண், 55 வயது ஆண் என 3 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. ஒரே பகுதியில் 4 பேருக்கு தொற்று ஏற்பட்டதால், 3-வது முறையாக காந்தல் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. இதற்கிடையில் நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்து இருக்கிறது.

Similar News