செய்திகள்
முக கவசம்

இதுவரை ரூ.1½ லட்சம் அபராதம் வசூல் : முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை

Published On 2020-06-17 10:37 GMT   |   Update On 2020-06-17 10:37 GMT
புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சி பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

கொரோனா எனும் உயிர்க்கொல்லி வைரசை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசு முழுவீச்சில் இதற்கான பணிகளை மேற்கொண்டு போராடி வருகிறது. புதுக்கோட்டையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று உறுதியானதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்புவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு ஒரு முதியவர் புதுக்கோட்டையில் பலியானார். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் பல்வேறு கட்டங்களாக அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சிலர் இதனை கடைப்பிடிப்பதில்லை.

இந்த நிலையில் முக கவசம் அணிவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. மேலும் முக கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்கள் மீது இதுவரை ரூ.60 ஆயிரமும், அறந்தாங்கி நகராட்சி பகுதியில் ரூ.85 ஆயிரமும் என ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர். இதனை தடுக்க அடுத்ததாக நடவடிக்கை தீவிரமாவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முக கவசம் அணியாதவர்கள் மீது போலீஸ் தரப்பில் நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா? என போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது வாகன சோதனையின் போது முக கவசம் அணியாமல் வந்தவர்களை பிடித்து எச்சரித்து, மோட்டார் வழக்கு தொடர்பாக அபராதம் விதிக்கப்படுவதாகவும், முக கவசம் அணியாதவர்கள் மீது வழக்கு ஏதேனும் இதுவரை பதியப்படவில்லை, என்றும் கூறினர். 
Tags:    

Similar News