செய்திகள்
சத்தியமங்கலம் அருகே பெல்லாரி வனப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் 3 குட்டிகளுடன் தாய்ப்புலி தண்ணீர் குடித்த காட்ச

பண்ணாரி அருகே 3 குட்டிகளுடன் குட்டையில் தண்ணீர் குடித்த தாய் புலி

Published On 2020-06-16 16:43 IST   |   Update On 2020-06-16 16:43:00 IST
சத்தியமங்கலம் அருகே பெல்லாரி வனப்பகுதியில் உள்ள ஒரு குட்டையில் 3 குட்டிகளுடன் தாய்ப்புலி தண்ணீர் குடித்து சென்றது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதியை உள்ளடக்கியது ஆகும். புலிகள் வசிக்கும் சிறந்த சீதோ‌‌ஷ்ணநிலையை கொண்டதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டிலேயே அதிக புலிகள் வசிக்கும் இடமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் திகழ்கிறது.

இந்த நிலையில் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் கடந்த 1 மாதமாக தாய்ப்புலி ஒன்று தனது 3 குட்டிகளுடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்காரணமாக வனத்துறையினர் பண்ணாரி வனப்பகுதியில் மிகுந்த எச்சரிக்கையுடன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வனச்சரக ஊழியர்கள் பண்ணாரியை அடுத்த பெல்லாரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள குட்டை ஒன்றில் தாய்ப்புலி தனது 3 குட்டிகளுடன் தண்ணீர் குடித்து கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்கள் செல்போனில் படமும், வீடியோவும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து பண்ணாரி, பெல்லாரி வனப்பகுதியில் ரோந்து செல்லும் வன ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Similar News