செய்திகள்
பிடித்து வரப்பட்ட மீன்கள் மற்றும் இறால்களை தரம்பிரிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ள காட்சி.

தடைக்காலத்திற்கு பின்னர் புதுக்கோட்டை மீனவர்கள் வலையில் அதிக மீன்கள், இறால்கள் சிக்கின

Published On 2020-06-15 17:03 IST   |   Update On 2020-06-15 17:03:00 IST
தடைக்காலத்திற்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வலையில் அதிக அளவில் மீன்கள், இறால்கள் சிக்கின.
கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள மீன்பிடி தளங்களில் இருந்து விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்களுக்கு, விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையால் தடை விதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். மேலும் தங்கள் படகுகளில் உள்ள சிறிய பழுதுகளை சரி செய்தனர். மீன்பிடி தடைக்காலத்தில் இப்பகுதியில் உள்ள அனைத்து மீன் மார்க்கெட்டிலும் மீன்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்தது. மீன்பிடி சார்ந்த தொழில்கள் முடங்கின.

இந்நிலையில் மீன்பிடி தடைக்கால நாட்களை குறைத்து, கடந்த 1-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்று அரசு அறிவித்தது. ஆனால் தடைக்காலம் முடிந்த பின்னரே மீன்பிடிக்க செல்வதென விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி தடைக்காலம் முடிந்த நிலையில், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் சுமார் 800 விசைப்படகுகளில் டீசல், ஐஸ் கட்டி மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்துக்கொண்டு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் கடலுக்கு சென்றதால், அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது போலவே, மீனவர்கள் வலையில் இறால்கள் மற்றும் நண்டுகள், மீன்கள் போன்றவை அதிக அளவில் சிக்கின. மீன்பிடித்துவிட்டு நேற்று காலை மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

முன்னதாக மீன்களை வாங்கிச்செல்ல இப்பகுதியில் இரவில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் குவிய தொடங்கினர். இருப்பினும் ஊரடங்கு காரணமாக அதிக அளவில் வியாபாரிகள் வரவில்லை. மேலும் வழக்கமாக மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை ஏலம் விடுவது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக மீன்களை ஏலம் விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள், இறால்கள், நண்டுகள் போன்றவை குறைந்த விலைக்கே விற்கப்பட்டது.

இதனால் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வழக்கமாக மீன்களை வாங்க வரும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநில வியாபாரிகள் ஊரடங்கு காரணமாக வரவில்லை. இதனால் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி தளம் கூட்டமின்றிகாணப்பட்டது.

Similar News