செய்திகள்
மரபணு குறைபாடுடன் சுற்றித்திரியும் காட்டெருமை.

தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரியும் காட்டெருமைக்கு மரபணு குறைபாடு - வனத்துறையினர் விளக்கம்

Published On 2020-06-15 16:03 IST   |   Update On 2020-06-15 16:03:00 IST
தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த காட்டெருமைக்கு தொற்று நோய் இல்லை என்றும், மரபணு குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிசோலையில் வனப்பகுதி காணப்படுகிறது. இங்குள்ள காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் சுற்றித்திரிவது வழக்கம். கடந்த வாரம் குன்னூர்-கோத்தகிரி சாலையில் பித்தாபூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில காட்டெருமைகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அதில் ஒரு காட்டெருமையின் உடல் பகுதியில் தோலின் நிறம் வெண்மையாக காணப்பட்டது. இது தொற்று நோய் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இதை சிலர் புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். மேலும் தொற்று நோய் ஏற்பட்டு உள்ளதாகவும், அதனை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து வண்டிசோலை பகுதிக்கு சென்று, அந்த காட்டெருமையை வனத்துறையினர் கண்காணித்தனர். அதன்பிறகு வனத்துறையினர் கூறியதாவது:-

பித்தாபூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த காட்டெருமைக்கு தொற்று நோய் இல்லை. குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை தோட்டங்களிலும் சுற்றித்திரிவதால் நாட்டு மாடுகளுடன் இணைந்து மரபணு குறைபாடு ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று வால்பாறை பகுதியிலும் ஒரு காட்டெருமை உள்ளது. இது கால்நடை டாக்டர்களிடம் விசாரித்தபோது, எங்களுக்கு தெரியவந்தது. அந்த காட்டெருமையின் உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Similar News