செய்திகள்
விசைப்படகில் ஏற்றுவதற்காக சிறிய படகு மூலம் வலை போன்றவற்றை மீனவர்கள் கொண்டு சென்ற காட்சி.

விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்

Published On 2020-06-12 15:00 IST   |   Update On 2020-06-12 15:00:00 IST
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கோட்டைப்பட்டினம்:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் மாதம் 14-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கம்போல் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. அதற்கு முன்பிருந்தே விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால், மீன்பிடி தடைக்கால நாட்களை குறைத்து, கடந்த 1-ந் தேதி முதல் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் ஊரடங்கு சமயத்தில் வெளியூர் சென்ற மீனவர்கள், தாங்கள் தொழில் செய்யும் பகுதிக்கு வராததாலும், மீனவர்கள் பிடித்து வரும் இறாலை வாங்குவதற்கு ஏற்றுமதி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வராததாலும், புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடந்த 1-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் நாளை(சனிக்கிழமை) முதல் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். நீண்டநாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் மீனவர்கள் நேற்று ஈடுபட்டனர். இதில் தங்கள் விசைப்படகுகளை தண்ணீர் ஊற்றியும், கிருமி நாசினி தெளித்தும் சுத்தம் செய்தனர்.

மேலும் மீன்பிடிக்க தேவையான வலை, ஐஸ்பெட்டி, டீசல் போன்றவற்றை கடற்கரையில் இருந்து சிறிய படகு மூலம் எடுத்துச் சென்று கடலுக்குள் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளில் ஏற்றினர். பல மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளுக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். மேலும் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் மீனவர்கள் தங்கள் வலைகளை சரிசெய்தும், விசைப்படகின் உதிரிபாகங்களான பலகை போன்றவற்றை பொறுத்தியும் வருகின்றனர்.

இது குறித்து ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் கூறுகையில், வழக்கமாக மீன் தடை காலத்தில் எங்களது விசைப்படகுகளை கரைக்கு ஏற்றி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், படகுகளில் முழுமையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டோம். கொரோனா பாதிப்பால் படகுகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்துள்ளோம்.

நாங்கள் வழக்கமாக 24 மணி நேரம் கடலில் தொழில் செய்வோம். ஆனால் தற்போது ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றிய வெளிமாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதாலும், விமான சேவை இல்லாததால், வெளிநாடுகளுக்கு கடல் உணவுகளை முழுமையாக ஏற்றுமதி செய்ய முடியாததாலும், தற்போது ஏற்றுமதி நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று கடலில் 12 மணி நேரம் மட்டுமே தொழில் செய்ய முடிவு செய்துள்ளோம்.

அதன்படி நாளை(சனிக்கிழமை) பகல் 1 மணிக்கு ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு புறப்பட்டு செல்லும். மீன்களை பிடித்துக் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை காலை மீனவர்கள் கரை திரும்புவார்கள். இவ்வாறு 12 மணி நேரம் மட்டும் தொழில் செய்வதால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும், என்றனர்.

Similar News