செய்திகள்
அபராதம்

சத்துவாச்சாரியில் தனிநபர் இடைவெளியை பின்பற்றாத டீக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

Published On 2020-06-12 12:58 IST   |   Update On 2020-06-12 12:58:00 IST
சத்துவாச்சாரியில் தனிநபர் இடைவெளியை பின்பற்றாத டீக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்:

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பொதுமக்கள் பொதுஇடங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் ஓட்டல்கள், டீக்கடைகள், காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் கூட்டமாக நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும், வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதை கடைக்காரர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையில் 2-வது மண்டல உதவிகமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நேற்று காலை சத்துவாச்சாரி பகுதியில் உள்ள கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது கடைகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் தனிநபர் இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என்று பார்வையிட்டனர்.

அதில், வேலூர் கோர்ட்டு அருகே உள்ள ஒரு டீக்கடையில் பொதுமக்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல் டீ, காபி குடித்து கொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. அரசின் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Similar News