செய்திகள்
மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

பாகூர் பகுதியில் பெய்த மழையால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

Published On 2020-06-06 15:34 GMT   |   Update On 2020-06-06 15:34 GMT
பாகூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் அறுவடை செய்ய சில நாட்களே உள்ள நிலையில் நெல் வயல்களில் தண்ணீர் புகுந்து சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் பாதித்துள்ளது.

பாகூர்:

புதுவையில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை திடீரென பாகூர் பகுதியில் மழை பெய்தது.

குறிப்பாக பாகூர், கிருமாம்பாக்கம், நெட்டப் பாக்கம் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன பலத்த மழை பெய்தது.

இந்த மழை நேற்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர் மழையாக பெய்தது. பாகூர் அளவில் மட்டும் 51 மில்லி மீட்டர் மழை பெய்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், நெற்பயிர்களிலும் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது.

பாகூர், கரையாம்புத்தூர், கரிக்கலாம்பாக்கம், சேலியமேடு, அரங்கனூர், பரிக்கல்பட்டு ஆகிய பகுதிகளில் அறுவடை செய்ய சில நாட்களே உள்ள நிலையில் இந்த திடீர் மழையால் நெல் வயல்களில் தண்ணீர் புகுந்து சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் பாதித்துள்ளது.

இதனால் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த இடி-மின்னலுடன் கூடிய மழையால் மின் வினியோகம் இரவு முழுக்க நிறுத்தப்பட்டது. இந்த இடி மின்னலுக்கு பாகூர் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இன்ஸ்பசினேடர்கள் பழுதாகியும் மின்கம்பி அறுந்து விட்டதாகவும் மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மின் இணைப்பு துண்டிப்பால் பாகூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளானார்கள்.

இதனை சரி செய்யும் பணியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையும் மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் படிப்படியாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இரவு- பகலாக மின்துறை ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டது பொது மக்களிடையே பாராட்டுக்களை பெற்றுள்ளனர்.


Tags:    

Similar News