செய்திகள்
பொறையாறு பஸ் நிறுத்தம்

நாகையில் 68 நாட்களுக்கு பிறகு 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கம்

Published On 2020-06-02 09:41 GMT   |   Update On 2020-06-02 09:41 GMT
நாகை மாவட்டத்தில் 68 நாட்களுக்கு பிறகு 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன.
நாகப்பட்டினம்:

கொரோனா ஊரடங்கு 5-வது கட்டமாக 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் நேற்று 68 நாட்களுக்கு பிறகு 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கின. அதன்படி நாகை பணிமனையில் இருந்து பஸ்களை ஓட்டும் டிரைவர்கள் பஸ்களுக்கு சூடம் ஏற்றி தங்களது பணிகளை தொடங்கினர்.

இந்தநிலையில் நாகை மண்டலத்தின் கீழ் செயல்படும் நாகை, மயிலாடுதுறை, வேதாரண்யம், சீர்காழி, பொறையாறு, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திருவாரூர், மன்னார்குடி, சிதம்பரம், காரைக்கால் ஆகிய 11 பணிமனைகளில் 325 பஸ்கள் 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டன. குறிப்பாக நாகை மாவட்டத்தில் மட்டும் நாகை பணிமனையில் இருந்து 33 பஸ்களும், சீர்காழி பணிமனையில் இருந்து 23 பஸ்களும், மயிலாடுதுறை பணிமனையில் இருந்து 44 பஸ்களும், வேதாரண்யம் பனிமனையில் இருந்து 29 பஸ்களும், பொறையாறு பணிமனையில் இருந்து 14 பஸ்களும் இயக்கப்பட்டன. அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்தனர்.

இதேபோல் பொறையாறு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 14 பஸ்களில் கிருமி நாசினி மருந்து தெளித்து இயக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பஸ்கள், பஸ் நிலையத்திலிருந்து பயணிகள் இல்லாமல் காலியாக புறப்பட்டன. ஒரு சில பஸ்களில் மிக குறைவான அளவிலேயே பயணிகள் சென்றனர்.
Tags:    

Similar News