செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2020-05-30 12:59 GMT   |   Update On 2020-05-30 12:59 GMT
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல்:

ஒகேனக்கல்லில் கடந்த 28-ந் தேதி 1500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2500 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை ஒகேனக்கல்லில் நீர்வரத்து மேலும் அதிகரித்து 3 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் செந்நிறத்தில் காவிரியில் வருவதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஊரடங்கு அமலில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி ஒகேனக்கல் வெறிச்சோடி கிடக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 2119 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 2250 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே நீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 100.73 அடியாக இருந்த மேட்டூர்அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.79 அடியானது.
Tags:    

Similar News