செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-05-28 11:51 GMT   |   Update On 2020-05-28 11:51 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விராலிமலை:

மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கடந்த 24-ந் தேதி 4 பேர் விராலிமலை தாலுகா நம்பம்பட்டி கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் நம்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அந்த நபரை சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அந்த 4 பேரை அழைத்து வந்த கார் டிரைவர் மற்றும் அவர்களது உறவினர் ஒருவருக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு நேற்று முன்தினம் நம்பம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதேபோல் அரிமளம் ஒன்றியம் ராயவரம் அருகே உள்ள கே.செட்டிபட்டி ஊராட்சி ஆனைவாரி கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மும்பை சென்று திரும்பினார். மருத்துவ குழுவினர் மற்றும் வருவாய்த்துறையினர் அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்விற்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை ஆனைவாரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைத்து தனிமைப்படுத்தினார்கள். ஆய்வு முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புதுக்கோட்டையில் செயல்படும் கொரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News