செய்திகள்
ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்ட போது எடுத்த படம்.

புதுக்கோட்டையில் 40 கடைகளுக்கு சீல் - போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2020-05-10 20:17 IST   |   Update On 2020-05-10 20:17:00 IST
புதுக்கோட்டையில் ஊரடங்கு தளர்வில் நடைமுறைகளை பின்பற்றாத 40 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
புதுக்கோட்டை:

ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை கடைவீதிகளில் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் கடந்த ஓரிரு நாட்களாக அலைமோதியது.

இதற்கிடையில் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வட்டம் வரைதல், கடைகள் முன்பு கயிறு கட்டுதல், கைகளை கழுவ கிருமி நாசினி வைத்தல், கடை ஊழியர்கள் முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாமல் சிலர் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் டவுன் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கீழ ராஜ வீதியில் குவிந்தனர். மேலும் தாசில்தார் முருகப்பன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் வந்தனர். கடை வீதியில் ஒவ்வொரு கடையாக பார்வையிட்டனர்.

அப்போது கடைகளில் இருந்த உரிமையாளர், ஊழியர்கள் சிலர் முக கவசம் அணியாமல் இருந்தனர்.

மேலும் சமூக இடை வெளியை பின்பற்ற கடைகள் முன்பு வட்டம் உள்ளிட்டவை எதையுமே வரையவில்லை. மேலும் கைகளை கழுவ கிருமிநாசினி வைக்கவில்லை. இதனை கண்ட அவர்கள் கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்தனர். தொடர்ந்து கடைகளை இழுத்து மூட உத்தரவிடப் பட்டது. இதைத்தொடர்ந்து கடைகளில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு கடையின் கதவுகளை போலீசார் இழுத்து மூடினர்.

கீழ ராஜ வீதி, மேல ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி உள்ளிட்ட கடை வீதிகளில் இந்த சோதனை நடந்தது. இதில் சமூக இடைவெளி உள்பட அரசு விதித்த நடைமுறைகளை பின்பற்றாத பாத்திர கடை, கவரிங் கடைகள், செருப்பு கடைகள் உள்ளிட்ட 40 கடைகளுக்கு வருவாய்த்துறை மூலம் போலீசார் ‘சீல்’ வைத்தனர். மேலும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் கடைவீதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Similar News