ஆலங்குடி அருகே ஊரடங்கால் வீணாகும் பலாப்பழங்கள்- விவசாயிகள் கவலை
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வேங்கி டக்குளம், தெட்சிணாபுரம், கொத்தக்கோட்டை, மழவராயன்பட்டி போன்ற ஆலங்குடி பகுதியில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன.
பலா மரங்கள் மாசி மாதத்தில் பூக்காமல் பிஞ்சு விடத்தொடங்குகின்றன. இவை பருத்து சித்திரை, வைகாசி மாதங்களில் சந்தைப்படுத்தப்படுவது வழக்கம். இப்பகுதியில் விளையும் பழங்கள் சதைப்பற்றுமிகுந்தும் சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
இவைகளை மொத்த வியாபாரிகள் அறுவடைக்கு முன்பே விவசாயிகளுக்கு முன் பணம் கொடுத்து வைப்பார்கள். அறுவடைக்குப்பின் மதுரை, கோவை, திருச்சி போன்ற முக்கிய பெருநகரங்களுக்கு லாரி மூலம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்பனை செய்வார்கள். இம்முறையால் விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வராததால் பலாப்பழங்களை பறிக்க முடியாமல் மரங்களி லேயே விடப்பட்டுள்ளன.பழங்கள் பழுத்து தானாகவே கீழே விழுந்து நாசமாகின்றன. அழுகும் பொருட்களை பாதுகாக்க குளிர்பதனக் கிடங்குகள் போதிய அளவில் இல்லை.
கட்டுப்பாடு முடிவுக்கு வந்து விடும் என எண்ணிய விவசாயிகள் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மனமுடைந்த நிலையில் உள்ளனர். எனவே அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென எதிர் பார்க்கிறார்கள்.