டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் கூட்டம்- வேலூரில் மதிமுக போராட்டம்
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை.
வேலூர் மாநகரில் காகிதப்பட்டறை, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆற்காடு ரோட்டில் உள்ள உயர் ரக மதுபான (எலைட்) விற்பனை கடை, செங்காநத்தம் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்பட்டன.
கடைகள் முன்பு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியுடன் நின்று வாங்கிச் செல்லவும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடைகள் முன்பு இன்று அதிகாலையிலேயே ஆதார் அட்டையுடன் குடிமகன்கள் குவிந்தனர். காலை 8 மணி முதலே அவர்கள் கடைக்கு முன்பாக காத்திருந்தனர்.
வயது அடிப்படையில் நேரக்கட்டுப்பாட்டுடன் மது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எந்தவித வயது வித்தியாசமின்றி டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்தனர்.
சில டாஸ்மாக் கடைகள் முன்பு சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து கடைகள் திறக்கப்பட்டது. அப்போது வரிசையில் நின்ற குடிமகன்கள் நண்பர்களுடன் சேர்ந்து கோஷமிட்டனர். மதுபாட்டில்களை வாங்கிய சிலர் கைகளில் அவற்றை தூக்கி காண்பித்தபடி சென்றனர்.
வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள எலைட் மது விற்பனைக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. வை சேர்ந்த கோபி உள்ளிட்ட 4 பேர் கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கொரோனா பரவாமல் தடுக்க டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அப்போது போலீசார் இது கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அல்ல. எனவே இந்த கடை திறக்கலாம் நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்றனர் அப்போது ம.தி.மு.க.வினர் நாங்கள் கடையை இழுத்து பூட்டு போடுவோம் எனக் கூறினர். இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அங்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.