புதுக்கோட்டை மாவட்டத்தில் குடோனில் வைத்திருந்த ரூ.4 கோடி மது பாட்டில்கள் திடீர் மாயம்
புதுக்கோட்டை:
ஊரடங்கு காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர், இலுப்பூர், விராலிமலை உள்பட பல்வேறு தாலுகாக்களில் பாதுகாப்பற்ற கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக லாரிகளில் ஏற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டது.
மாவட்டத்தில் 7 இடங்களில் மதுபாட்டில்கள் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் தினமும் மதுவிற்ற பணம் மற்றும் மீதமுள்ள ஸ்டாக் பற்றி அந்தந்த கடை சூப்பர் வைசர்கள், மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதுடன் கணக்கு காட்ட வேண்டும்.
ஊரடங்கு அமலில் வந்த மார்ச் 24-ந்தேதி பெரும் பாலான கடைகளில் மது விற்ற கணக்கு இதுவரை காட்டப்படவில்லை என்றும், சரியான இருப்பும் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னர் இரவு 10 மணி வரை பெரும்பாலான கடைகளில் கள்ள சந்தையில் மது விற்பவர்களுக்கு பெட்டி, பெட்டியாக மது விற்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் பல கோடி வரை மது விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் துணையுடன் முறைகேடாக மது விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி டாஸ்மாக் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஊரடங்கு அமலில் வந்த நாளன்று இரவு வரை பெட்டி, பெட்டியாக பிளாக்கில் மது பாட்டில்கள் விற்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இடங்களில் ரூ.4 கோடி வரை மதுபாட்டில் இருப்பு குறைகிறது. நாளை 7-ந்தேதி கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளதால், மது பாட்டில் விவரம் கணக்கெடுத்தபோது இந்த முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பு குறைவதற்கான பணத்தை அந்தந்த கடைகளின் சூப்பர்வைசர்களே கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.