ஊருக்குள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் யானைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்க ஏற்பாடு
குடியாத்தம்:
குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர மாநில எல்லை பகுதியில் உள்ளது. குடியாத்தம் ஆந்திர மாநில எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த மோர்தானா, சைனகுண்டா , கொட்டமிட்டா, தனகொண்டப்பள்ளி, குடிமிப்பட்டி, மோடி குப்பம் மற்றும் பரதராமி அடுத்த கொத்தூர், டி.பி. பாளையம், ரெட்டியார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் இரவு நேரங்களில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையோர கிராமங்களில் உள்ள நிலங்களில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வந்தது.
பல மாதங்களாக நடைபெறும் இந்த யானைகள் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்த யானைகள் கூட்டத்தை வனத் துறையினர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் தினமும் விரட்டி வந்தனர்.
இருந்தாலும் யானைகள் மீண்டும், மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. .
இதனையடுத்து மண்டல வனப்பாதுகாவலர் சேவா சிங், மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் ஏற்பாட்டின்படி ஓசூர் பகுதியில் இருந்து யானை விரட்டும் படையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் மற்றும் பரதராமி பகுதியில் உள்ள செம்மர தோட்ட காவல் படையினர் 15 பேரும் வனத்துறையினர் உடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனையடுத்து குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர்கள் ரவி, பிரகாஷ் உள்ளிட்டோர் கொண்ட குழுவில் ஓசூரில் இருந்து வந்த யானை விரட்டும் படையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து நேற்று முன்தினம் இரவு கொட்டமிட்டா பகுதியில் மாந்தோப்புக்குள் புகுந்து சேதப்படுத்திய 15 யானைகளை நேற்று மதியம் வரை பல மணி நேரம் விரட்டிச் சென்று மூங்கில் தோட்டம் வழியாக மோர்தனா காட்டுப் பகுதிக்கு விரட்டி உள்ளனர்.
அதேபோல் பரதராமி அடுத்த கொத்தூர், டி.பி. பாளையம் ஆஞ்சநேயர் கோவில் அருகே நேற்று இரவு முகாமிட்டிருந்த 16 யானைகளை வனவர் முருகன் தலைமையில் வனத்துறையினர் செம்மர தொட்ட காவலர்கள் என 25-க்கும் அதிகமானோர் மற்றும் கிராம மக்கள் 100 பேருடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.
தினந்தோறும் 10, 20 என தற்போது 31 யானைகள் வருகிறது. இதனிடையே யானைகள் கூட்டத்தை நிரந்தரமாக தடுக்கும் பொருட்டு குடியாத்தம் வனத்துறை சார்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
சுமார் ரூ.16 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு யானைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து கருத்துரை மற்றும் நிதி ஒதிக்கீடுகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினால் இப்பகுதியில் யானைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு காட்டுப் பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதியும் யானைகள் நிலங்களுக்குள் புகாமல் தடுப்பதற்காக நிரந்தரமாக யானைத் தடுப்பு காவலர்கள் அமைத்தப்படுவார்கள் எனவும் மேலும் சூரிய சக்தி மின் வேலி, யானை புகா பள்ளங்கள், பணியாளர்கள் குடியிருப்பு, கண்காணிப்பு கோபுரங்கள், பணியாளர்களுக்கு தேவையான வாகனங்கள் உள்ளிட்ட முகாம் அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்படும் எனவும் இந்த திட்டத்துக்காக காத்திருப்பதாகவும் இந்த திட்டம் ஏற்கப்பட்டு நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுவது நிரந்தரமாக தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீண்டும் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா பகுதியில் மாந்தோப்புக்குள் புகுந்து ஏராளமான மாமரங்களை சேதப்படுத்தியது