செய்திகள்
கோப்பு படம்

வேலூரில் போக்குவரத்து மாற்றம் - பைக்கில் 2 பேர் செல்ல தடை

Published On 2020-05-06 14:56 IST   |   Update On 2020-05-06 14:56:00 IST
வேலூரில் ஊரடங்கு கடைபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதற்காக மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூரில் ஊரடங்கு கடைபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதற்காக மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்கவும் மற்றவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லாமல் இருக்கவும் பல்வேறு இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் இன்று முதல் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை ஆரணி பகுதிகளிலிருந்து சித்தூர் காட்பாடி குடியாத்தம் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் சாத்துமதுரை அரியூர் மூலை கேட் வழியாக சென்று வரவேண்டும்.

திருவண்ணாமலை, ஆரணியில் இருந்து சித்தூர் காட்பாடி குடியாத்தம் செல்லும் மோட்டார் சைக்கிள் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் பாகாயம் புதிய மாநகராட்சி அலுவலகம் கோட்டை பின்புறம் பழைய பைபாஸ் பாலாறு புதிய பாலம் வழியாக செல்ல வேண்டும்.

சி.எம்.சி ஆஸ்பத்திரி காகிதப்பட்டறை பழைய பஸ் நிலையம் செல்பவர்கள் கோட்டை பின்புறம் பழைய பைபாஸ் சாலை வழியாக வந்து நே‌ஷனல் சர்க்கிள் அருகே திரும்பி செல்ல வேண்டும்.

காட்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு வாகனங்களில் செல்பவர்கள் பாலாறு பழைய பாலம் கிரீன்சர்க்கில் பழைய பஸ் நிலையம் தொரப்பாடி பாகாயம் வழியாக செல்லவேண்டும். ஊரடங்கு முடியும்வரை வாகன ஓட்டிகள் ஆரணி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

காரில் டிரைவரை தவிர 2 பேர் பயணிக்கலாம். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் விதியை மீறி வந்த வாகன ஓட்டிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் வேலூரில் காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Similar News