செய்திகள்
ரேஷன் கடையில் அரிசி வழங்கப்பட்டதையும் படத்தில் காணலாம்.

ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தொடங்கியது

Published On 2020-05-05 17:02 IST   |   Update On 2020-05-05 17:02:00 IST
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் தொடங்கியது.
புதுக்கோட்டை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான (மே) அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,020 ரேஷன் கடைகளில் 4½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவினியோகத் திட்டம் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வீடு, வீடாக டோக்கன் கடந்த 2 நாட்களாக வினியோகிக்கப்பட்டன. அதில் பொருட்கள் வாங்குவதற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று வினியோகம் தொடங்கிய நிலையில் அத்தியாவசிய பொருட்களை பெற மக்கள் ரேஷன் கடைகளுக்கு வந்தனர். சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்றனர். இந்த மாதத்திற்கான அரசு அறிவித்த தலா ஒரு கிலோ சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தலா 5 கிலோ வீதம் அரிசி ஆகியவை விலையில்லாமல் வழங்கப்பட்டன.

அரிசியை ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த தகர தகடு வழியாக ஊழியர்கள் வினியோகித்தனர். இதனை பைகளில் மக்கள் பிடித்துக்கொண்டனர். இதற்கிடையில் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகத்தை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளர் உமாமகேஸ்வரி, கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, வட்ட வழங்கல் அலுவலர் பொன்மலர், தாசில்தார் முருகப்பன் ஆகியோர் உடனிருந்தனர். ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் அந்தந்த தேதியில் ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்குரிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

Similar News