செய்திகள்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடக்கம்

Published On 2020-05-05 12:40 IST   |   Update On 2020-05-05 12:40:00 IST
தமிழகத்தில் முதன் முதலாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கின.
புதுக்கோட்டை:

கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவ மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டன.

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வகுப்பை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தொடங்கி வைத்தார். ஆன்லைனில் நடத்தப்பட்ட வகுப்பில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டன.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், “இனிவரும் காலங்களிலும் இந்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். ஒரு நாளைக்கு 1½ மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படும். தமிழகத்தில் இந்த முயற்சியை முன்னெடுத்த முதல் மருத்துவ கல்லூரி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி ஆகும். முதலாம் ஆண்டு பயிலும் 150 மாணவர்களில் 140 மாணவர்கள் ஆன்லைனில் நேற்று கலந்து கொண்டனர்” என்றார்.

இந்நிகழ்ச்சியின் போது உடலியங்கியல் துறை பேராசிரியரும் துணை முதல்வருமான டாக்டர் சுஜாதா, ஹார்மோன்கள் பற்றிய பாடங்களை பயிற்றுவித்தார். தொடர்ந்து உதவிப் பேராசிரியர்கள் டாக்டர் அன்பரசி, சாஜு நிஷா, வெங்கடேஷ் ஆகியோர் பாடங்களை நடத்தினர்.

Similar News