செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில்தான் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-05-04 16:13 IST   |   Update On 2020-05-04 20:22:00 IST
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் ஒரே சராசரி அளவிலேயே இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்கு மாவட்டம் முழுவதும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை நகராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருக்கும் 1.5 லட்சம் பேருக்கு இந்திய மருத்துவதுறை சார்பில் கபசுரக் குடிநீரும் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செலிலியர்கள் தங்குவதற்கும் மற்றும் அவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் வழங்கவும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் ஒரே சராசரி அளவிலேயே இருக்கும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதிகள் உள்ளது. மேலும் எல்லா பகுதிகளில் கொரோனா தொற்று சிகிச்சை மையங்களையும் அதிகப்படுத்தி வருகிறோம்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பதற்கு எல்லா விதமான கருவிகளும் போதுமான அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை அவ்வப்போது மத்திய சுகாதார குழுவினர் வந்து ஆய்வு செய்து நாம் அளிக்கும் சிகிச்சை முறை மற்றும் தொற்று நோய் பாதித்தவர்கள் நாம் வழங்கும் ஆரோக்கியமான உணவு முறைகளையும் பார்த்து அவர்கள் பாராட்டி சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News