செய்திகள்
கோப்பு படம்

புதுக்கோட்டை அருகே கொரோனா ரத்த பரிசோதனை நடத்திய போலி டாக்டர் கைது

Published On 2020-04-30 14:58 IST   |   Update On 2020-04-30 14:58:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் கொரோனா ரத்த பரிசோதனை நடத்திய போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கபடுகிறதா என்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம் திருவோணம் சாலையில் ஜவுளிக்கடை ஒன்று விதிகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் அப்துல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் ஜவுளி கடையில் ஆய்வு நடத்தினர் .

அப்போது கடை திறக்கப்பட்டு இருந்ததுடன் வியாபாரம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்தனர். இதனிடையே கறம்பக்குடி திருவோணம் சாலை செட்டித்தெரு அருகில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் பொதுமக்களுக்கு வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தாசில்தார், செயல் அலுவலர் மற்றும் ஆர்.ஐ. ஸ்டெல்லா, வி.ஏ.ஓ. ராஜகுமாரி சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ரத்த பரிசோதனை நிலையம் போலியாக செயல்பட்டு வந்ததும் அதனை நடத்தி வந்த அன்பழகன் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு வைரஸ் அறிகுறி இருக்கிறதா இல்லையா என்று போலியாக பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அன்பழகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News