செய்திகள்
முக ஸ்டாலின்

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்? - முக ஸ்டாலின் கேள்வி

Published On 2020-04-22 16:33 IST   |   Update On 2020-04-22 16:33:00 IST
மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
 
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்றும் கூறி இன்று காலையில் போராட்டம் நடத்திய செய்தி கரோனாவை விடக் கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்குக் கூட போதிய வசதி செய்துதர முடியாத அரசாங்கமா இது?
இது மக்களைக் காக்கும் அரசா?

சில ஆயிரம் மருத்துவர்களையே முறையாகக் கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக்களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது!

சென்னை போன்ற பெருநகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை! 

தமிழக சுகாதாரத் துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News