செய்திகள்
கைது

குக்கரில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

Published On 2020-04-22 10:25 GMT   |   Update On 2020-04-22 10:25 GMT
ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், சங்ககிரி அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்ககிரி:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

இதை பயன்படுத்தி சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் தீவிர சாராய வேட்டை நடத்தி, அவர்களை கைது செய்து வருகிறார்கள். சாராய ஊறல்கள் அழிக்கப்படுகிறது. வெளியில் சாராயம் காய்ச்சினால் தான் போலீசார் பிடிப்பார்கள், வீட்டில் சாராயம் காய்ச்சினால் யார் பிடிக்க முடியும்? என்று கருதி மதுப்பிரியர்கள் சிலர் வீடுகளில் காய்ச்ச தொடங்கி விட்டதாக தெரிகிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மோரூர் மேற்கு ஊராட்சி பகுதியை சேர்ந்த சிலர் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சங்ககிரி போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஐயப்பன் (வயது 43) என்பவரது வீட்டில் 3 பேர் குக்கரில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மூர்த்தி (24), சுப்பிரமணி (40) ஆகியோர் என்பது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் குக்கரில் இருந்த 2 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, அழித்தனர். இது தொடர்பாக ஐயப்பன், மூர்த்தி, சுப்பிரமணி ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Tags:    

Similar News