செய்திகள்
சஸ்பெண்டு

ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க பணம் வசூல்- சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்டு

Published On 2020-04-20 16:31 IST   |   Update On 2020-04-20 16:31:00 IST
வேலூரில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஒப்படைக்க பணம் வசூல் செய்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கு மீறி வெளியே சுற்றுபவர்களின் வானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை திருப்பி ஒப்படைக்கும் பணிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

வாகனங்களை ஒப்படைக்கும் போது அதன் உரிமையாளரிடம் போலீசார் லஞ்சம் வாங்க கூடாது. அதனை மீறி பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் ஊரடங்கு மீறியதாக தள்ளுவண்டி ஒன்றை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார், ஏட்டு மணிமேகலை ஆகியோர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வண்டியை திருப்பி ஒப்படைக்க பணம் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக டி.ஐ.ஜி காமினிக்கு புகார் வந்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் இதுபற்றி விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் பணம் வசூல் செய்தது உறுதியானது.

இதனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் ஏட்டு மணிமேகலை ஆகியோரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதேபோல் வேலூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மஞ்சுநாதன் ஊரடங்கின் போது அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் வந்தது. அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எழுத்தர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி பனமடங்கி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வேலூர், பாகாயம், போலீஸ் நிலையத்தில் எழுத்தராக உள்ள சப்-இன்ஸ் பெக்டர் பாலமுருகன் வாகனங்களை ஒப்படைக்க பணம் கேட்டதாக புகார் வந்தது. இதனையடுத்து அவர் பனமடங்கி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்த அதிரடி நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News