செய்திகள்
வேலூரில் மீன், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதல்
வேலூரில் ஊரடங்கு காரணமாக மீன், இறைச்சி கடைகள் முன்பு ஏராளமானோர் திரண்டதால் மட்டன் ரூ.800, சிக்கன் ரூ.250 க்கு விற்பனை செய்யப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் ஞாயிறு, செவ்வாய் வெள்ளிக்கிழமை மட்டுமே காலை 6 மணி முதல் 12 மணி வரை மளிகை கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காய்கறிகள் பால் பெட்ரோல் விற்பனை தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை நடந்து வருகிறது.
மீன் இறைச்சி சிக்கன் கடைகளில் நேரடியாக விற்பனை செய்யக்கூடாது. ஆர்டரின் பேரில் வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மீன் இறைச்சி விற்பனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவப் பிரியர்கள் அதிகாலையிலேயே மீன், இறைச்சி கடைகள் முன்பு திரண்டனர். பொதுமக்களிடம் கடைகளில் நேரடி விற்பனை கிடையாது. கடை முன்பு எழுதி வைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு ஆர்டர் செய்யுங்கள் அதற்கு பிறகு உங்களுக்கு மீன், இறைச்சி வழங்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆனாலும் கடைகள் முன்பு திரண்டிருந்த ஏராளமானோர் உடனே வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சென்றனர். வழக்கமாக விற்பனை செய்யும் விலையை விட மட்டன், சிக்கன் விலை உயர்ந்துள்ளது. இன்று மட்டன் ஒரு கிலோ ரூ.800, சிக்கன் ரூ.250 க்கும் விற்பனையானது.சத்துவாச்சாரி,காட்பாடி, தொரப்பாடி, பாகாயம், விருப்பாச்சிபுரம் பகுதிகளில் மட்டன் மீன் கடைகள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கடைகள் முன்பு விதிமீறினால் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.