செய்திகள்
வேலூர் மாவட்டம்

வேலூரில் 6 பகுதிகள் நூறு சதவீதம் துண்டிப்பு

Published On 2020-04-18 17:25 IST   |   Update On 2020-04-18 17:25:00 IST
வேலூரில் உள்ள 6 பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அப்பகுதிகள் முழுவதும் போலீசார் மூலம் நூறு சதவீதம் சீலிடப்பட்டு முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 21 பேர் மாநகராட்சிக்கு உட்பட்ட 30, 51, 52 மற்றும் 56 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சைதாப்பேட்டை, ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

இப்பகுதிகளிலுள்ள தெருக்கள் ஏற்கெனவே சீலிடப்பட்டு அங்குள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரக் குழுவினர் உடல்நல பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆர்.என்.பாளையத்தில் 9, கொணவட்டத்தில் 4, கருகம்பத்தூரில் 3, சைதாப்பேட்டையில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நோய்த்தொற்று பரவலை தடுக்கும் வகையில் அப்பகுதிகள் முழுவதும் போலீசார் மூலம் நூறு சதவீதம் சீலிடப்பட்டு முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அப்பகுதி மக்கள் எக்காரணத்துக்காகவும் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். அவர்களின் வசதிக்காக பால், மளிகை, காய்கறிகள் ஆகியவை வேலூர் மாநகராட்சி, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டப் பணியாளர்களைக் கொண்டு பிரத்யேக வாகனங்கள் மூலம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை நேரடியாக விநியோகிக்கப்படும். இந்த பணியில் மொத்தம் 30 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

அப்பகுதிகளில் மருந்துக்கடைகளை மட்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களின் பணத் தேவைக்காக ஏ.டி.எம். செல்வதைத் தவிர்ப்பதற்காக வங்கி தொடர்பாளர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் பள்ளிகளிலேயே காலை 9 மணி முதல் 12 மணி வரை கையடக்க ஏ.டி.எம். எந்திரம் மூலம் பணம் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்களுக்கு ஆர்டரின் பேரில் மளிகைப் பொருள்களை வீடுகளுக்கு சென்று வழங்க ‘ஹலோ வேலூர்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 0416-2252501, 2252661 ஆகிய எண்களில் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

மறுநாள் காலை நகரில் தேர்வு செய்யப்பட்ட மொத்த விற்பனைக் கடைகள் மூலம் நேரடியாக அவர்களது இல்லத்துக்கே சென்று பணத்தை பெற்றுக்கொண்டு பொருள்கள் அளிக்கப்படும். இதற்காக ஒரு ஆர்டரின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் தினமும் 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். கட்டுப்பாட்டு பகுதி மக்களின் அவசரத் தேவைகள், புகார்களுக்கு கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0416-2258016 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News