வேலூர் சைதாப்பேட்டையில் 3 பேருக்கு கொரோனா - டாக்டர் குடும்பத்தினர் உள்பட 30 பேருக்கு பரிசோதனை
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த டீக்கடைக்காரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனையடுத்து அவர் வீடு உள்ள பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கொரோனா அறிவதற்கு முன்பாக அவருக்கு சைதாப்பேட்டையை சேர்ந்த 74 வயது டாக்டர் சிகிச்சை அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டாக்டர் மற்றும் ஏற்கனவே பலியானவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த 25 வயது வாலிபர், 30 வயது இளம்பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட டாக்டரின் மனைவி, மகன் மற்றும் அவரது கிளினீக்கில் பணியாற்றிய ஊழியர்கள் உள்பட அதே பகுதியை சேர்ந்த 30 பேர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடைய ரத்தம், சளி சோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பகுதியில் சுகாதார பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் 7 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதில் 185 பேர் ரத்தம், சளி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் 2 நாட்களில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.