செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா சோதனை

Published On 2020-04-17 16:47 IST   |   Update On 2020-04-17 16:47:00 IST
எலுமிச்சை கடைக்காரர் உள்பட 4 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து வேலூர் நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
வேலூர்:

வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த 60 வயது வியாபாரி வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் எலுமிச்சை மொத்த விற்பனை கடை வைத்துள்ளார்.

இவரது 52 வயது மனைவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 60 வயது எலுமிச்சை வியாபாரி மற்றும் அவரது 29 வயது மகள் மற்றும் 4 வயது பேத்தி ஆகியோருக்கும் கொரோனா இருப்பது நேற்று உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன்பாக வியாபாரி குடும்பத்தினர் கொணவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை, தனியார் கிளினீக்கில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனையடுத்து 2 ஆஸ்பத்திரிகளில் உள்ள 3 டாக்டர்கள், 10 நர்சுகள் உள்பட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

மேலும் கொணவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களில் சிகிச்சை பெற்ற இதர நோயாளிகளும், அவர்களுடன் வந்த உறவினர்கள் அனைவரும் உடனடியாக தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

வியாபாரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் மார்க்கெட் பகுதியில் அவரது கடைக்கு அருகில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் அங்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்று காலையில் வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகே பழைய பஸ் நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்தனர். மார்க்கெட்டில் உள்ள அனைத்து வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என அனைவரையும் சுகாதாரத் துறையினர் அழைத்துவந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இதில் 50 வியாபாரிகள் ரத்தம், சளி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

வியாபாரி குடும்பத்தினர் வசிக்கும் கொணவட்டம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதல் 12 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிந்தவர்கள் அவர்களுடன் பழக்கத்தில் உள்ளவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் நேதாஜி மார்க்கெட், மண்டி தெரு, லாங்கு பஜார் பகுதியில் அனைத்து இடங்களிலும் சுகாதார பணிகள் இன்று காலையில் தீவிரப்படுத்தப்பட்டன. அங்கு லைசால் கரைசல் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டது. மார்க்கெட்டிற்கு வந்த வாகனங்களுக்கு மருந்து தெளித்தனர்.

ஒரே நாளில் வியாபாரி குடும்பத்தினர் மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டதால் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News