செய்திகள்
ஜல்லிக்கட்டு (கோப்புப்படம்)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இடங்களில் ஜல்லிக்கட்டு- ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் கூடினர்

Published On 2020-03-17 11:33 GMT   |   Update On 2020-03-17 11:33 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை:

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள் மற்றும் ஷாப்பிங் மால்களை மூட உத்தரவிட்டதோடு பொதுமக்கள் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரண்டு இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் அதிக அளவிலான ஜல்லிக்கட்டு நடைபெறும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 29 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இன்று விராலிமலை அருகேயுள்ள ராஜகிரி மற்றும் பொன்னமராவதி அருகே உள்ள பொன்னம்பட்டி ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிட்டவாறு நடத்தப்பட்டது.

ராஜகிரியில் நடந்த ஜல்லிக்கட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். அங்குள்ள திடலில் நடந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

பொன்னம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கும் 5 ஆயிரம் பேர் வரை கூடியிருந்தனர்.

ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடவேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் அவர்கள் தடுக்கப்படவில்லை. மாடு பிடி வீரர்களுக்கு மட்டும் போட்டி தொடங்கு முன்பு அவர்களது கைகளை சானிட்டைசர் எனப்படும் திரவம் மூலம் கைகளை கழுவ அறிவுறுத்தப்பட்டனர். பொது மக்களுக்கு எந்தவித முன்னேற்பாடும் செய்து தரப்படவில்லை.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு வரும்போது, இந்த ஜல்லிக்கட்டு போட்டியையும் மற்றொரு நாளுக்கு தள்ளி வைத்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தகுந்த ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 15 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். போட்டி நடத்தப்பட்ட இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மாடுபிடி வீரர்கள் மட்டும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும் பார்வையாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியதை தவிர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இனியும் மீதமுள்ள போட்டிகளையாவது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News