செய்திகள்
முத்தரசன்

சூப்பர் ஸ்டார் பதவியை தக்க வைக்க முயற்சி செய்யட்டும்- முத்தரசன்

Published On 2020-03-14 03:50 GMT   |   Update On 2020-03-14 03:50 GMT
ரஜினிகாந்த் தனது சூப்பர் ஸ்டார் பதவியை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்யட்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினிகாந்த் நல்ல நடிகர் என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அதையும் தாண்டி அவரை விட சிறப்பாக நடிப்பதற்கு இளம் நடிகர்கள் வந்து விட்டனர். எனவே ரஜினிகாந்த் தனது சூப்பர் ஸ்டார் பதவியை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்யட்டும். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என நடிகர் ரஜினிகாந்த் கூறுவது ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் உள்ளதுதான்.

ரஜினிகாந்தை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர். அவரை பற்றிய விவரம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். வெற்று அறிவிப்புகளை மட்டுமே ரஜினிகாந்த் வெளியிட்டு வருகிறார். 30 சதவீதம் பேரை வெளியில் இருந்து சேர்க்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது அவரின் இயலாமையை காட்டுகிறது.

தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் வழங்காதது அ.தி.மு.க. செய்த சூழ்ச்சி. அ.தி.மு.க. கூட்டணியில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பதை தே.மு.தி.க.தான் இனி முடிவு செய்ய வேண்டும். த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க.வில் இணையமாட்டார் என நம்புகிறேன். கோவிட்-19 வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏப்ரல் 13-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை திருச்சியில் தொடங்கி வேதாரண்யம் வரை சமூக நல்லிணக்க பாத யாத்திரை நடைபெற உள்ளது. பா.ஜ.க.வில் மாநிலத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களை சமாளிக்க முடியாமல் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக அக்கட்சி அறிவித்துள்ளது. அதே சமயம் இதுவரை பட்டியல் இன மக்களுக்காக எந்தஒரு நல்லதையும் பா.ஜ.க. செய்ததில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News