நாகையில் மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த கீச்சாங்குப்பம் மீனவர்களுக்கும், அதனை கேட்ட வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது.
மீனவர்களின் மோதலில் இரு கிராமத்தை சேர்ந்தவர்கள் 20க்கும் மேற்பட்டோர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மீன் துறை இணை இயக்குனர் அமல் சேவியர் தலைமையில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நாகை துறைமுகம் பகுதியில் அதிரடியாக நுழைந்தனர். போலீசாரை தடுத்து நிறுத்திய கீச்சாங்குப்பம் மீனவப் பெண்கள் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் காவல் துறையினருக்கும் மீனவர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வலைகளை பறிமுதல் செய்ய அனுமதிக்கமாட்டோம் எனக்கூறி மீனவப் பெண்கள் தொடர்ந்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருவதால் நாகை துறைமுகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.