செய்திகள்
மீனவர்கள் தாக்குதல்

நாகை அருகே வெள்ளப்பள்ளத்தில் நடுக்கடலில் மீனவர்களிடையே கடும் மோதல்- 7 பேர் படுகாயம்

Published On 2020-03-11 17:13 IST   |   Update On 2020-03-11 17:13:00 IST
நாகை அருகே வெள்ளப்பள்ளத்தில் நடுக்கடலில் மீனவர்களிடையே கடுமையாக தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மற்றும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதில் மீனவர்களுக்கு இடையே நடுக் கடலில் மோதல் ஏற்படுவது வாடிக்கை ஆகி வருகிறது.

இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் அருகே கடலில் நேற்று மாலை 4 மணியளவில் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 120 பேர் விசைப்படகில் சென்று அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பைபர் படகில் கடலுக்கு விரைந்து சென்றனர். பின்னர் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப் படகை சுற்றி வளைத்தனர்.

அப்போது கீச்சாங்குப்பம் மீனவர்களிடம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறி தடுத்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கடலிலேயே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கீச்சாங்குப்பம் பகுதி மீனவர்கள் தாங்கள் வந்த விசைப் படகால் வெள்ளப்பள்ளம் மீனவர்களின் பைபர் படகு மீது ஆக்ரோ‌ஷமாக மோதியுள்ளனர்.மேலும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசியும் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தங்கள் கிராமத்தை சேர்ந்த மற்ற மீனவர்களுக்கு இதுபற்றி உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வெள்ளப்பள்ளம் கிராமத்தை ஏராளமான மீனவர்கள் கடலுக்கு படகுகளில் விரைந்து வந்து கீச்சாங்குப்பம் மீனவர்கள் வந்த விசைப்படகை சுற்றி மறித்தனர்.

பின்னர் மீண்டும் இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் வெள்ளப் பள்ளம் மீனவர்கள் பிரசாந்த் (வயது19), ஆனந்த வேல்(18), தினேஷ்(21), விஜய்(25), முத்துவேல்(41), முருகானந்தம்(20) ஆகிய 6 பேரும்.

கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர் அஜித்(25) ஆகிய ஒருவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 7 மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதரப்பு மீனவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தாக்குதலை கண்டித்து வெள்ளப்பள்ளம் பகுதி மீனவர்கள் வேதாரண்யம்-நாகை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

இதனிடையே நாகை துறைமுகம் மற்றும் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, செருதூர், விழுந்தமாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுவதால் அப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News