செய்திகள்
அரசு தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து பணியில் ஈடுபட்டனர்

கொரோனா வைரஸ் பீதி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

Published On 2020-03-11 10:08 GMT   |   Update On 2020-03-11 10:08 GMT
கொரோனா பீதி காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 61 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான வெளிநாடு, வெளி மாநில, மாவட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது கோடை காலம் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்க உள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான மக்கள் வர தொடங்கி உள்ளனர். அவர்கள் சுற்றுலா பகுதிகளை சுற்றி பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பீதி காரணமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தோட்டக் கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியதாவது:-

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் பகுதிகளில் அனைத்திலும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சுற்றுலா பயணிகளின் கைகள் சுத்தப்படுத்திக் கொள்வதற்கு என கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News