நாகையில் ரூ.5 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்- 2 பேர் கைது
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதும், வெளி நாடுகளுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதும் தொடர்கதையாக வருகிறது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைபேட்டை திடீர்குப்பம் பகுதியில் இரு இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைததொடர்ந்து வன அலுவலர் கலாநிதி தலைமையிலான அதிகாரிகள் அக்கரைபேட்டை மற்றும் திடிர்குப்பம் ஆகிய பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அக்கரை பேட்டை பகுதியில் செண்பகம் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 டன் எடையிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து திடீர் குப்பம் பகுதியில் சோதனை மேற்கொண்ட வனத்துறை காவலர்கள் முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 டன் எடையிலான கடல் அட்டை களையும் மற்றும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கருவேல காட்டில் பதுக்கி வைத்திருந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் முருகானந்தம் மற்றும் செண்பகம் ஆகிய இருவரை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.