கொள்ளிடம் அருகே 3 மாதத்துக்குள் குண்டும் குழியுமான புதிய சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீயாளம் கிராமத்திலிருந்து பன்னங்குடி கிராமத்துக்கு செல்லும் 4 கிலோமீட்டர் தூர சாலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த தார் சாலை மிகவும் மோசமானதால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இச்சாலை பணிக்காக டெண்டர் விடப்பட்டு மோசமான சாலையை மேம்படுத்தும் வகையில் தார் சாலை போடும் பணி நடைபெற்றது பணியும் நிறைவுற்றது.
ஆனால் போடப்பட்டு மூன்றே மாதம் ஆன நிலையில் சாலை பழைய நிலைமைக்கே வந்து விட்டது. இதனால் கிராம மக்களும் மாணவர்களும் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்த சாலை மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பெயரளவுக்கு சாலை போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த சாலை போடப்பட்டதற்கான தொகை பெருமளவில் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சீயாளத்திலிருந்து கற்பள்ளம் வரை போடபப்ட்ட 4 கிலோ மீட்டர் தூர தார் சாலை போடப்பட்ட மூன்றே மாதத்தில் மிகவும் மோசமாகி விட்டதால் இச்சாலையின் வழியே செல்லும் மாணவர்கள், விவாசாயிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.
எனவே அரைகுறையாக சாலை போடும் பணியை மேற்கண்ட ஒப்பந்ததாரர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து , மீண்டும் உடனடியாக சாலையை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பன்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.