செய்திகள்
கோப்புப்படம்

சீர்காழியில் லாரி உரிமையாளர்கள் தர்ணா போராட்டம்

Published On 2020-03-07 15:25 IST   |   Update On 2020-03-07 15:25:00 IST
நெல் சேமிப்பு கிடங்கில் வெளியூர் லாரிகள் நெல்மூட்டைகளை இறக்க எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சீர்காழி:

நாகை மாவட்டத்தில் நடப்பு பருவமான சம்பா சாகுபடி முடிந்து நெல் அறுவடை நடந்துவருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து வாங்கி நெல் சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மயிலாடுதுறை தாலுகாவிலிருந்து திடீரென வெள்ளிக்கிழமை 30 லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு எடமணல் சேமிப்பு கிடங்குக்கு நெல் இறக்க வந்தது.

இதனால் சீர்காழி பகுதியில் உள்ள லாரிகள் வேலை இன்றி நிறுத்தி வைக்கப்படும் சூழல் உருவாகும் என்றும், உள்ளூர் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றுக்கூறி சீர்காழி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் அதன் தலைவர் வேலு தலைமையில் நெல் சேமிப்பு கிடங்கில் வெளியூர் லாரிகள் நெல்மூட்டைகளை இறக்க எதிர்ப்பு தெரிவித்து எடமணல் கிடங்கு முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் சீர்காழிக்கு வட்டாசியர் அலுவலகத்திற்கு வந்து அங்கும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் லாரி உரிமையாளர்களுடன் சமூக பாதுகாப்பு நல தாசில்தார் மலர் விழி தலைமையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் சண்முகநாதன் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் மயிலாடுதுறையில் இருந்து லாரிகளில் ஏற்றிவரும் நெல் மூட்டைகளை மயிலாடுதுறை லோடு மேன்களை கொண்டு இறக்கிக்கொள்வது என்றும், சீர்காழி லாரிகள் மூலமாக இந்த நெல்மூட்டைகளை வெளியில் எடுத்து செல்வது, சீர்காழி இருந்து நெல் ஏற்றி வரும் நெல்லை சீர்காழி லோடுமேன்களை கொண்டு விரைவாக இறக்குவது, சீர்காழி ரெயில் தளத்தில் 42சரக்கு பெட்டிகளை வைத்து நெல்லை ஏற்றி அனுப்ப நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வேலு, செயலாளர் வெங்கடேசன், துணை தலைவர் உலகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

Similar News