செய்திகள்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடக்கம்

Published On 2020-03-05 09:03 IST   |   Update On 2020-03-05 09:03:00 IST
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ராமேசுவரத்தில் இருந்து 100 படகில் 3000 பேர் நாளை புறப்பட்டு செல்கின்றனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் இந்த ஆண்டுதிருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

நாளை மாலை 5 மணியளவில் நெடுந்தீவு பங்கு தந்தை எமிழிபால், அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடியை ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் ஏற்றுகிறார்.தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பெரிய மரத்தால் ஆன சிலுவைகளை தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் சேர்ந்து தூக்கி வர 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலி பூஜை நடைபெற்று திருவிழா திருப்பலி பூஜைகளும் நடைபெறுகின்றன. தொடர்ந்து இரவு 8 மணியளவில் அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேரை இரு நாட்டு மக்களும் மற்றும் இலங்கை கடற்படையினரும் சேர்ந்து தூக்கி ஆலயத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

திருவிழாவின் 2-வது நாளான நாளை மறுநாள் காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தலைமையில் திருவிழா திருப்பலி பூஜைகள் நடைபெறுகின்றன. 10 மணியுடன் திருப்பலி பூஜை முடிந்து கொடியிறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவடைகின்றது.

திருவிழாவிற்கு ராமேசுவரம் மீன் பிடி துறைமுக பகுதியில் இருந்து புறப்பட்டு 75 விசைப்படகு மற்றும் 25 நாட்டுப் படகுகளிலும் சேர்த்து மொத்தம் 3000 பேர் நாளை செல்லவுள்ளனர். இதேபோல் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி கச்சத் தீவில் மரங்களை அகற்றிபாதை அமைப்பது, திருவிழாதிருப்பலி பூஜை நடைபெறும் இடங்களில் பந்தல் அமைப்பது மற்றும் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் பணியில் 100-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படைவீரர்கள் கடந்த 3 நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவிழாவையொட்டி ராமேசுவரம் கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிவேக கப்பல் ஒன்றும் மண்டபம் இந்திய கடலோரகாவல் படை நிலையத்தில் உள்ள 2 ஹோவர் கிராப்ட் கப்பல்களும் மற்றும் மற்றொரு அதிவேக கப்பலும் மண்டபம் முதல் ராமேசுவரம் தனுஷ்கோடி வரையிலான கச்சத்தீவுக்கு இடைப்பட்ட இந்திய கடல் பகுதியில் தீவிரமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.

Similar News