செய்திகள்
கைது

விருத்தாசலம் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது

Published On 2020-02-26 09:28 GMT   |   Update On 2020-02-26 09:28 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயப்பிரபா. இவர் அரசு சமூக நலத்துறை வழங்கும் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்தநிலையில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது உறவினரின் திருமண நிதி பெற விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வந்திருந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரி ஜெயபிரபா அவரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சப்பணம் கொடுக்க விரும்பாத கோவிந்தராஜ் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரையின்படி கோவிந்தராஜ் இன்று விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கிருந்த அதிகாரி ஜெயபிரபாவிடம் லஞ்ச பணம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணம் வாங்கிய ஜெயபிரபாவை கையும், களவுமாக பிடித்தார்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி ஜெயபிரபாவை கைது செய்தனர். ஜெயபிரபா இந்த மாத இறுதியில் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News