செய்திகள்
கொள்ளை

வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2020-02-25 05:22 GMT   |   Update On 2020-02-25 05:22 GMT
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் பணம் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வேப்பூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது சேப்பாக்கம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சதக்அப்துல்லா. இவரது மனைவி பர்வின்பானு (வயது 35).

சதக்அப்துல்லா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பர்வின்பானு சேப்பாக்கத்தில் தனது மாமியார், மாமனார் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பர்வின் பானுவின் மாமனார் அபுகனி பாபுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதற் காக அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது மனைவி அருகில் இருந்து கவனித்து வருகிறார்.

நேற்று மாலையில் பர்வின் பானு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தனது மாமனாரை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இதை அறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தனர். பின்பு அவர்கள் பர்வின்பானுவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்பு அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்தனர். அதில் இருந்த ரொக்க பணம் ரூ.40 ஆயிரம் மற்றும் 6 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இன்றுகாலை பர்வின் பானுவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் புதுவைக்கு சென்றிருக்கும் பர்வின் பானுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதை கேட்டதும் பர்வின் பானு உடனடியாக சேப்பாக்கம் வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிகிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை-பணம் கொள்ளை போய் இருந்தது.

இதுகுறித்து அவர் வேப்பூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் கொள்ளைநடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேப்பூர் பகுதியில் அடிக்கடி கொள்ளை- வழிபறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வழிபறி-கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்லவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News