செய்திகள்
தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தியபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் திடீர் சோதனை

Published On 2020-02-24 08:28 GMT   |   Update On 2020-02-24 08:28 GMT
தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கடலூர் மாவட்டத்தில் காஜா மொய்தீனின் மனைவிகள் மற்றும் ஆதரவாளர்கள் வசித்து வரும் 4 இடங்களில் உள்ள அவர்களது வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.
கடலூர்:

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் வில்சன் (வயது 57). இவரை களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது பயங்கரவாதிகள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அப்துல் சமீம் (29), தவுபிக் (27) ஆகியோரை கைது செய்தனர். இவர்களின் கூட்டாளிகளான முகமது ஹனிப்கான் (29), இம்ரான்கான் (32), முகமது ஜெயித், இசாஸ் பாஷா (46), மெகபூபாஷா (46), உசேன் ஷெரிப் (32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் கடலூரை சேர்ந்த காஜாமுகைதீன் தீவிரவாத அமைப்புகளுக்கு தலைவனாக இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் காஜாமுகைதீனை தீவிரமாக தேடி வந்தனர். இவர் டெல்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசார் காஜாமுகைதீனை கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

கைதான காஜாமுகைதீனுக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி ஆகும். இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி நெய்வேலியை சேர்ந்த இந்திரா, 2-வது மனைவி ராமநாதபுரத்தை சேர்ந்த காஜிராபானு, 3-வது மனைவி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்த பக்ருதீன்நிஷா.

இவர்களில் இந்திராவுக்கு ஒரு மகனும், பக்ருதீன் நிஷாவுக்கு 2 மகனும் உள்ளனர். ஒரு மகனுக்கு அபிபுல்லா என்றும் இன்னொரு மகனுக்கு ஒசாமா பின்லேடன் என்றும் காஜா முகைதீன் பெயரிட்டுள்ளான். இவன் 3 மனைவிகளிடமும் ஏராளமான ஆண் குழந்தைகளை பெற்று பயங்கரவாத அமைப்பை உருவாக்கவேண்டும் என்று அடிக்கடி மூளை சலவை செய்துள்ளான்.

இவனது திட்டத்துக்கு முதல் மனைவியான இந்திரா உடன்படவில்லை. எனவே காஜாமுகைதீன் காஜிராபானு, பக்ருதின் நிஷாவிடம் மட்டும் வாழ்ந்து வந்தான்.

கடந்த 2004-ம் ஆண்டு காஜாமுகைதீன் நெல்லிக்குப்பம் பகுதியில் தீவிரவாத அமைப்பை உருவாக்குவதற்காக வகுப்புகள் நடத்தி உள்ளான். இது தொடர்பாகவும் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. அதோடு நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் 2003-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் இருந்து காஜாமுகைதீன் 2014-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டான்.

இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கிலும் காஜா முகைதீனுக்கு தொடர்பு உள்ளது. இவரது பெயரில் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை விற்று அதில் வரும் பணத்தை வைத்து பயங்கரவாத அமைப்பை தொடங்கினான். இந்த அமைப்பு மூலம் தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அசம்பாவித சம்பவங்களை நடத்த திட்டமிட்டிருந்தான்.

இந்த நிலையில் காஜா மொய்தீனின் டிரைவரான ஜாபர் அலி என்பவரது வீடு மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ளது. மேலும் காஜாமொய்தீனின் கூட்டாளியான அப்துல் சமது வீடு பரங்கிபேட்டையில் உள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வுதுறை அதிகாரிகள் இன்று காலை கடலூர் மாவட்டத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காஜா மொய்தீனின் மனைவிகள் மற்றும் ஆதரவாளர்கள் வசித்து வரும் காட்டு மன்னார்கோவில், நெய்வேலி, மேல்பட்டாம்பாக்கம், பரங்கிபேட்டை ஆகிய 4 இடங்களில் உள்ள அவர்களது வீடுகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து அந்த வீடுகளின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேல் பட்டாம்பாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிரான்கோ தலைமையிலான தேசிய புலனாய்வுதுறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையினால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News