செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை வந்த விமானத்தில் 12½ கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2020-02-20 04:54 GMT   |   Update On 2020-02-20 06:23 GMT
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 12½ கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 14 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கடத்தல்காரர்களை கைது செய்தும், தங்கத்தை பறிமுதல் செய்தும் வருகிறார்கள்.

எனினும் தங்கம் கடத்தல் சம்பவம் தினந்தோறும் நடந்து வருகிறது. இந்த கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாக தெரிகிறது.



இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக நேற்று மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர்.


அப்போது 18 பயணிகள் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்தி வந்து இருப்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து 12½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களிடம் சோதனை நடத்தி வெளியே அனுப்பிய பின்னரே இந்த கடத்தல் தங்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து இருந்தனர். எனவே இதில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து தங்கம் கடத்தி வந்த 18 பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்ய முடிவு செய்தனர். அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்காக விமான நிலையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்து கொண்டிருந்தன.

அப்போது அங்கு வந்த கடத்தல்காரர்களுக்கு அறிமுகமான ஏராளமானோர் அதிகாரிகளிடம் திடீரென வாக்குவாதம் செய்தனர். இந்த நேரத்தில் தங்கம் கடத்தல்காரர்கள் 18 பேரும் ஆளுக்கு ஒரு திசையாக தப்பி ஒட்டம் பிடித்தனர்.

இதனால் அவர்களை கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

இதுகுறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தப்பி ஓடியவர்களின் பாஸ்போர்ட் விவரத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கடத்தல்காரர்கள் 14 பேர் சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் இன்று காலை விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கடத்தல்காரர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News