செய்திகள்
கவிழ்ந்து கிடக்கும் தனியார் கல்லூரி பஸ்

ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்தது: 50 மாணவ-மாணவிகள் காயம்

Published On 2020-02-18 14:32 IST   |   Update On 2020-02-18 14:32:00 IST
ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்த விபத்தில் 50 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினசரி கல்லூரி பஸ்களில் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள்.

அதன்படி இன்று காலை சேத்தியாத்தோப்பில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி கல்லூரி பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.

இந்த பஸ் சாஸ்தா வட்டம்- நாச்சியார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த 50 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் வேதனையால் அலறி துடித்தனர்.

சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். காயம் அடைந்த மாணவ-மாணவிகள் 108 ஆம்புலன்ஸ் வேன்கள் மூலம் ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News