செய்திகள்
கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்ட காட்சி.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை பாராட்டிய இளங்கோவன்

Published On 2020-02-18 08:22 GMT   |   Update On 2020-02-18 08:29 GMT
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஓரளவுக்கு பாராட்டக்கூடியது என்று ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சூரம்பட்டி:

சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இந்த சட்டத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவர மாட்டோம் என்று கூறி உள்ளனர். இது தமிழக மக்களுக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும் .

மதத்தால் மொழியால் கலாச்சாரத்தால் இந்த குடியுரிமை சட்டத்தினால் பிரிக்கும் சூழ்ச்சி நடக்கிறது. இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிரதமர் மோடியின் சகாப்தம் முடிந்து விடும்.

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.400க்கு விற்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் இப்போது மோடியின் ஆட்சியில் ஆயிரத்தை எட்டி உள்ளது. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவதுடன் ஏழை எளிய மக்கள் சமைப்பதற்கே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மோடியின் ஆட்சியில் நாடு மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. படித்தவர்களுக்கு வேலை இல்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.



தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஓரளவுக்கு பாராட்டக்கூடியதாக இருந்தாலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று கூறுவதினால் அவருக்கு உள்ள நல்ல பெயருக்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News