செய்திகள்
குடோனில் உள்ள ரசாயன கேன்களை படத்தில் காணலாம்.

படப்பை அருகே குடோனில் ரசாயன கேன் வெடித்து பெண் தொழிலாளி பலி

Published On 2020-01-31 15:01 IST   |   Update On 2020-01-31 15:01:00 IST
படப்பை அருகே குடோனில் ரசாயன கேன் வெடித்து பெண் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

குன்றத்தூர் அடுத்த மன்னன்சேரி ஸ்ரீ ராஜ கணபதி நகர் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவர் குன்றத்தூர் அடுத்த அமரம்பேடு கிராமத்தில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார்.

ராஜா சென்னையில் உள்ள ராமாபுரம், சூளை பள்ளம், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதியில் பழைய இரும்பு கடையில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வந்து அதை அரைத்து தூளாக்கி சென்னை புளியந்தோப்பு பகுதியில் விற்பனை செய்து வந்தார்.

இவரிடம் 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வந்தனர். இவர்கள் அமரம்பேடு பழைய இரும்பு கடை குடோனுக்கு அருகே தங்கி வேலை செய்து வந்த னர்.

இந்நிலையில் நேற்று பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்திரிகா புஷ்வான் (32) மற்றும் இவரது உறவினர் சஞ்சய் ஆகிய இருவரும் அமரம்பேடு பகுதியில் உள்ள குடோனில் ரசாயன பிளாஸ்டிக் கேன்களை அறுத்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த ரசாயன கேன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.இதில் சந்திரிகா புஷ்வான், சஞ்சய் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரிகா புஷ்வான் பரிதாபமாக இறந்தார். சஞ்சய் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த சோமங்கலம் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். அந்த குடோனை சோதனை செய்ததில் 30-க்கும் மேற்பட்ட ரசாயன கேன்கள் இருப்பது கண்டுபிக்கப்பட்டது.

பழைய இருப்பு குடோன் உரிமையாளர் ராஜாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இதே போல கடந்த 20ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மலைபட்டு கிராமத்தில் குப்பை மேட்டில் கிடந்த ரசாயன கேனை அதே பகுதியை சேர்ந்த சாந்தி வீட்டுக்கு எடுத்து வந்து அதை வெட்டும் போது ரசாயன கேன் வெடித்து சாந்தி பரிதாபமாக இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News