செய்திகள்
கி.வீரமணி

5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிடாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்- கி.வீரமணி

Published On 2020-01-29 09:54 GMT   |   Update On 2020-01-29 09:54 GMT
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிடாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி காஞ்சிபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

5-ம் வகுப்பு 8-ம் வகுப்பு பொது தேர்வுகளை தமிழக அரசு கைவிட வேண்டும்,

இந்ததேர்வு சிறு குழந்தைகள் இடைநிற்றலுக்கு வழி செய்யும், மனச்சுமையை ஏற்படுத்தும்.

இந்த ஆபத்தான திட்டத்தை அரசு இந்த ஆண்டே கைவிடவில்லையென்றால் வருகின்ற பிப்ரவரி இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்திலோ ஒரு பெரிய சிறை நிரப்பும் போராட்டத்தை திராவிடர் கழகம், ஒத்த கட்சிகளையும் இணைத்து நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு திருச்சியில் பிப்ரவரி 21-ல் நடைபெறும் கூட்டத்தில் வெளியிடப்படும்.

நீட் தேர்வை தொடர்ந்து மத்திய அரசு அடுத்த வெடி குண்டை தூக்கி போடுவது போல மாநில அரசின் உரிமையை பறிப்பதற்கு பொது சுகாதாரம், மருத்துவ மனைகளை மாநில பட்டியலில் இருந்து நீக்கி ஒத்து செய்யும் பட்டியலுக்கு எடுத்து செல்லப்போவதாக நிதி கமி‌ஷன் பரிந்துரை என்று ஆக்கியிருக்கிறார்கள், இது மாநில அரசுகளுக்கு மிக பெரிய ஆபத்து.

ஏனென்றால் மருத்துவர்கள் நியமனம் எல்லாம் மத்திய அரசிடமிருந்து வரும்,

நீட் தேர்விற்கு விதிவிலக்கு அளிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு சொல்வதை போல, இதற்கும் மத்திய அரசு விதி விலக்கு அளிக்காது.

இந்த நடைமுறையினால் இங்குள்ள மருத்துவர்கள் பிற மாநிலங்களுக்கு பணி அமர்த்தப்படுவார்கள், பிற மாநில மருத்துவர்கள் இங்கு பணி அமர்த்தும் போது அவர்களுக்கு மொழி தெரியாது, நோயாளிகளின் பிரச்சினைகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே இத்திட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே மாநில அரசு சட்டமன்றத்தில் தீர்வு காண வேண்டும், எதிர்கட்சிகள் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் மாநில அரசுகளின் உரிமை பறிப்பு என்பது தான் மத்திய அரசின் பணியாக உள்ளது. இதை தெளிவாக புரிந்து கொண்டு தடுக்கின்ற முயற்சியில் மாநில அரசும்,மாநில தலைவர்களும் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News