செய்திகள்
திருமாவளவன்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: சிறுவர்கள் மீதான உளவியல் தாக்குதல் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published On 2020-01-28 08:49 GMT   |   Update On 2020-01-28 10:19 GMT
5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது சிறுவர்கள் மீதான உளவியல் தாக்குதல் என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சீபுரம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காஞ்சீபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது மிக மோசமான ஒரு அரசு பயங்கரவாத நடவடிக்கை இதனை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இது மாணவ-மாணவிகள் மீது நடத்துப்படுகின்ற உளவியல் தாக்குதல் இதனை அரசு எந்தவிதத்திலும் நியாயபடுத்த முடியாது. எனவே 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்.

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது மற்றும் உடைத்து நொறுக்குவது போன்ற நடவடிக்கைகளை சங்பரிவார் அமைப்புகளின் வன்முறை பேச்சால் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன.

எனவே இதை தடுப்பதற்கு தனிப்படை ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கென தனி உளவு அமைப்புகளை உருவாக்க வேண்டும். இதனால் சமூக ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கிராமசபை கூட்டங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு இயற்றப்படும் தீர்மானங்களாக இருந்தாலும் கூட அதை நிறைவேற்றும் நிலையில் தமிழக அரசு அதிகார வலிமை பெற்றவர்களாக இல்லை.

தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க கூடிய ஒன்றாக தற்போது மாறி சுதந்திரமாகவும் தனியாகவும் செயல்பட முடியாத நிலையில் உள்ளது.

இதனால் சட்டமன்றத்திலோ கிராம சபைகளிலோ இயற்றப்படும் தீர்மானங்கள் அது மக்களுக்கு பயன் தரக்கூடிய தீர்மானங்களாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் நிலையில் அதிகார வலிமை பெற்றவர்களாக இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய செயலாளர் டேவிட், நிர்வாகி இந்திரா நாராயணன் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News